Wednesday, August 5, 2009

மேலச்சேரி பச்சையம்மன் கோயில்மேலச்சேரி பச்சையம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. காளி, கமலக்கண்ணி, பூவாத்தம்மன், பச்சையம்மன், மாரியம்மன், செல்லியம்மன், துரோபதையம்மன் ஆகிய ஏழு கன்னியரில் ஒருத்தியே இந்த பச்சையம்மன்.

மேலச்சேரி கிராம எல்லையில், மலைகளும் அடர்ந்த வனங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பச்சையம்மன் சந்நிதிக்கு எதிரே எல்லை முனி, வாமுனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, பச்சைமுனி, கும்பமுனி என்னும் ஏழு முனிகள் கம்பீரமாக அமர்ந்துள்ளனர்.

செஞ்சிக்கோட்டை பகுதியை ஆண்ட தேசிங்கு ராஜாவைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவனுக்கு சில தலைமுறைகள் முன்பாக ஆட்சி செய்தவன் வீரபத்திர ராஜா என்ற மன்னன். பொதுவாக தங்கள் குறைகளைக் கூற மக்கள் மன்னனை நாடி அவ்வப் போது வருவது வழக்கம். இந்த வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் மன்னனைத் தேடி யாருமே வருவதில்லை என்ற நிலைக்குச் சென்று விட்டது. இதனால் ஆச்சரியம் கொண்ட வீரபத்திர ராஜா அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து, "மக்கள் யாரும் அரண்மனைப் பக்கம் வருவதே இல்லையே. அப்படியானால் அவர்களுக்குக் குறையென்பதே இல்லையா? பசி, பிணி, கள்வர் பயம் போன்ற எதுவுமற்று சுபிட்சமாக மக்கள் வாழ்கிறார்களா? ஆச்சரியமாக உள்ளதே! நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று இதற்கான காரணத்தைக் கண்டு வாருங்கள்'' என்று ஆணையிட்டான்.

அவ்வாறே சென்ற மந்திரிப் பிரதானிகள் சில நாட்களில் திரும்பி வந்து மன்னரை வணங்கி நின்றனர். "நாட்டு நிலைமை என்ன?'' என்று மன்னர் கேட்க, ""அரசே! மக்கள் எப்போதும்போல் நிறைகுறைகளோடு தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு மாற்றுவழி கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் பக்கமிருந்து பச்சையம்மாள் என்ற பெண்மணி மேலச்சேரி வனப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அருள் வாக்கு கூறியிருக்கிறாள். அது அப்படியே நடந்ததாம். இதையறிந்த ஊர்மக்கள் பச்சையம்மாளிடம் சென்று அருள்வாக்கு கேட்க, அவளும் சொல்லியிருக்கிறாள். அதன்படியே எல்லாம் நடக்க, விஷயம் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்போது யாருக்கு எந்தப் பிரச்சினையென்றாலும் அந்தப் பச்சையம்மாவிடம் போய் சொல்லிப் பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். அதனால்தான் மன்னரான தங்களைக் காண யாரும் வருவதில்லை'' என்றனர்.

இதைக் கேட்ட வீரபத்திர ராஜாவுக்கு மீசை துடித்தது. "யாரோ ஒரு பெண் எனக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்துகிறாளா!"என்று கொதித்தெழுந்த மன்னன், படை பரிவாரங்களோடு பச்சையம்மாள் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டான். அங்கே தெய்வாம்சம் திகழ பச்சையம்மாள் வீற்றிருக்க, அவளைச் சுற்றி மக்கள் பவ்யமாய் அமர்ந்திருந்தனர். அக்காட்சியைக் கண்ட மன்னன் பச்சையம்மாளுக்கு எதிரே போய் நின்று கோபமாகப் பார்த்தான். அம்மனின் பார்வை அவன்மீது பட்டதும் அவனுக்கு சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டன. அப்படியே அவள் பாதத்தில் விழுந்தவன், "தாயே! உங்கள் அருமையைப் பற்றி அறியாமல் கோபத்தோடு வந்த என்னை ண்ித்தருள வேண்டும்'' என்றான்.

"
அப்படி நீ வருவாய் என்பது எனக்குத் தெரியும். நாட்டுக்குக் காவலனாக இருந்த நீ, இனி எனக்குக் காவலனாக இங்கேயே இரு. நாட்டை உனது வாரிசுகள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்'' என்றாள்.

"
பெரும் பாக்கியம் தாயே!'' என்று கூறி, அங்கு காவலுக்கு அமர்ந்தான் மன்னன்.

(
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே இங்கு பச்சையம்மன் கோவில் கொண்டாள். கோவிலுக்கு முன்பாக வீரபத்திர ராஜா தனி மண்டபத்தில் இருப் பதை இப்போதும் காணலாம்.)

இங்கே மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக வந்து படையல் போடும் போது, இந்தப் பகுதியே மிக உற்சாகமாக -கலகலப்பாக இருக்கும். மாலை ஐந்து மணி கடந்துவிட்டால் ஒரு காக்காய்கூட இருக்காது.

இக்கோவிலின் அருகிலேயே துரோபதை அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த அம்மனும் சக்தி மிகுந்தவள் என்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊர்களில் துரோபதை அம்மன் கோவில் கட்ட எண்ணினால், இந்த அம்மன் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்றுதான் கோவில் கட்டுவார்களாம். "எல்லா துரோ பதை அம்மன்களுக்கும் மூத்தவள் இந்த மேலச்சேரி துரோபதை அம்மன்'' என்கிறார்கள் ஊர் மக்கள்.

2 comments:

  1. பச்சையம்மன் கோயில் படங்கள் கிடைத்தால் இடுக

    ReplyDelete
  2. செஞ்சிக் கோட்டை பற்றி பயனுள்ள தகவல்கள் இந்த வலைதளத்தில் அடங்கியுள்ளன. செஞ்சிக்கு வருபவர்கள் இததிலுள்ள தகவல்களை அறிந்து கொண்ட பின் பார்வையிடச் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete