செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது
செஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.
காஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி "சிவ செஞ்சி" என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி "விஷ்ணு செஞ்சி" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.
ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.
ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் "சந்திர புஷ்கரணி" என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.
செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.
மேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ்
உள்ளது.